சைவசித்தாந்த சான்றிதழ் படிப்பு

முதல் நிலை: சிவவித்து

பட்டம் - "சிவமழலை"

அ. திருமுறை வாழ்த்து

பாடல்: 1 திருமுறை வாழ்த்து

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்

தெய்வத்தின்மேல் தெய்வம்இல்லெனும் நான்மறைச் செம்பொருள்

வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்

உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணையே.

- சைவஎல்லப்ப நாவலர்

ஆ. நால்வர்துதி

பாடல்: 2 சமயக்குரவர்கள் வாழ்த்து

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி!

ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி!

வாழி திரு�நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி!

ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி!

- உமாபதி சிவம்

பாடல்: 3 சந்தானக்குரவர்கள் வாழ்த்து

ஈராண்டில் சிவஞானம் பெற்று உயர்ந்த

மெய்கண்டார் இணைத்தாள் போற்றி...!

நாராண்ட பல்அடியார்க்கு அருள் புரிந்த

அருள் நந்தி நற்றாள் போற்றி...!

நீராண்ட கடந்தை நகர் மறைஞானசம்பந்தர்

நிழல் தாள் போற்றி...!

சீராண்ட தில்லை நகர் உமாபதியார்

செம்பதுமத் திருத்தாள் போற்றி...!

பாடல்: 4 திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் வாழ்த்து

பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல்

குண்டரை வென்று முன் கூடல் வைகியே

வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும்

தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.

பாடல்: 5 திருநாவுக்கரசு சுவாமிகள் வாழ்த்து

பொய் உரை நூல் சில புகலும் தீ யமண்

கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு

வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு

துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.

பாடல்: 6 சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்த்து

வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண்

உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால்

இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று

அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.

பாடல்: 7 மாணிக்கவாசக சுவாமிகள் வாழ்த்து

கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச்

சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய்

முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால்

வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.

இ. குருவணக்கம்

பாடல்: 8

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

트ெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே.

- திருமந்திரம் – திருமூலர்

பாடல்: 9

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ:

ஈ. விநாயகர் துதி

பாடல்: 10

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

- திருமந்திரம்

பாடல்: 11

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்

பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்

நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்

மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்.

- விருத்தாசல புராணம்

பாடல்: 12

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து.

- மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

உ. சிவபெருமான் துதி

பாடல்: 13

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

விளக்கம்:

எவ்வுயிர்களாயினும் தம்மறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்! : அவனை மனத்தால் உணர்வதும், மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானதுஅல்லவாம். அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்!. (அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி!) பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம். அளவிட இயலாத ஒளியினை உடையனாம்! அரியவன், வேணியன், சோதியன் - இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான். அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று அவனெடுத்துக் கொடுத்த அடியினை முடிக்கிறார் சேக்கிழார்பெருமான். இப்பாடலில் இறைவனின் இரண்டு நேரெதிர் இயல்புகளைக் கூறுவதைக் கேட்கலாம். அறிவதற்கு அரியவனாய் - உருவம் என்று ஒன்று இல்லாதவன் ஆகவும், அதே சமயத்தில் நிலவினையும் நீரினையும் சடைமுடியில் அணிந்தவனாகவும் இருக்கிறான். அலகில்(லாத) - அளவிட முடியாத சோதிப் பிழம்பாய் இருக்கிறான். அதே சமயத்தில் - அம்பலத்தில் எப்போதும் ஆடுபவனாகவும் இருக்கிறான்!

பாடல்: 14

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

விளக்கம்:

வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.

பாடல்: 15

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே.

விளக்கம்:

இறைவனிடம் அதிக அன்பு கொண்டு, அந்த அன்பு காரணமாக மனம் உருகி, கண்களில் தாரை தாரையாக நீர் வழியும் அன்பர்கள். அப்படிப்பட்ட அன்பர்களை வீடுபேறான நல்வழியில் சேர்ப்பது. நான்கு வேதங்களும் சொல்லும் உண்மையான பொருளாக இருப்பது. தலைவனான சிவபெருமானின் நாமம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமாகும்.

பாடல்: 16

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என்னம் பாலிக்கு ஆறு கண்டு இன்பு உற

இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.

விளக்கம்:

தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் நடராசப் பெருமானைத் தரிசிக்க, உயிர்க்கு அமுதாகிய வீட்டின்பம் கிடைக்கும்; உடலின் வளமைக்குரிய உணவு கிடைக்கும்; பொன்னுலகமாகிய தேவர் உலக வாழ்வு கிடைக்கும். இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்குரிய திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்களுக்கு யாவும் கை வரப்பெறும். எம்பெருமானைத் தரிசித்தவர்களுக்கு மீண்டும் இப்பிறவி வாய்க்குமோ?

பாடல்: 17

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!

மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி!

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!

ஓவாத சத்தத்து ஒலியே போற்றி!

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!

ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

விளக்கம்:

விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலைபெற்றிருப்பவனே! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே! இடையறாத சொற்களின் ஒலியே! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே! காற்றாகி எங்கும் கலந்தவனே! கயிலை மலையில் உறைபவனே! உனக்கு வணக்கங்கள் பல.

பாடல்: 18

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

விளக்கம்:

பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன்?

பாடல்: 19

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே

விளக்கம்:

கடவுள் ஒருவனே என்று திருமூலர் கூறுகிறார். விஞ்ஞான பார்வையுடன் பார்த்தால், இப்பிரபஞ்சமானது சக்தியிலிருந்து துகள்களும், அதன் எதிர் துகள்களும் தோன்றி, அதன் பல்வேறு சேர்க்கையால் அனைத்தும் தோன்றிற்று என்பர். ஆக இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாகிய அளப்பதர்கரிய அச்சக்தியே கடவுள் ஆவர். இக்கடவுளே வள்ளலார் கூறும் அருட்பெருஞ்சோதி. மாயையின் மயக்கத்தில் பலவாகத் தோன்றிடினும், கடவுள் ஒன்றே என்பதையே தன்னுடைய பாடலால் வலியுறுத்துகிறார்.

பாடல்: 20

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரை யானே

விளக்கம்:

சிவன் உடன் பேரின்பத்தை தரும் தெய்வம் தேடி தேடி பார்த்தேன். எங்கும் இல்லையே.அந்த சிவனை ஒப்பிடும் யாரும் இல்லையா டா சாமி ஒப்பார் சிவனை ஓத்த ஒரு இறைவன் உலகில் மத்தியில் யாவரும் இல்லை. புவனம் என்ற வான் உலகையும் கடந்த ஒன்று உன் கையில் உள்ள பொன்னை விட நெஞ்சில் நிறைந்த பொன் ஒளியாக மின்னுகிறது தவ சடைமுடியாய் ஆளும் தாமரைப்பூ போன்ற வானவர் இதழ் நடு வானவானவூர்தியின் நடுவே அமர்ந்திருந்தானே.

பாடல்: 21

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை

சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே

விளக்கம்:

இறைவன் தீயை விடச் சூடானவன், நீரை விடவும் குளிர்ச்சியானவன். அவனே தீயில் வெம்மையாகவும், நீரில் குளிர்ச்சியாகவும் அவனே அனைத்து உணர்வுகளாகவும் விளங்குகிறான். இறைவன் அனைத்துமாக இருந்தாலும் அவனின் அருளை முழுமையாக அறிந்தவர் யாரும் இல்லை. குழந்தை (அ) தொலைவு. இதனை குழந்தையைப் போன்ற நல்ல குணாதிசயங்களை உடையவன், கொண்டாடப் படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். நாத்திகம் பேசி விலகி செல்வோருக்கும் நன்மையை மட்டுமே தருபவன், நெருங்கிச் சென்று அருள்பவன். தன் மீது அன்புடயோர்க்கு தாயைப் போன்று பாசம் கொண்டவன்.

பாடல்: 22

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

விளக்கம்:

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்" என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தின் 270 ஆம் பாடல் வரியாகும். இதன் பொருள், அன்பும் சிவமும் வெவ்வேறானவை என்று கூறும் மக்கள் அறிவற்றவர்கள் என்பதாகும். உண்மையான அறிவைப் பெற்றவர்கள் அன்புதான் சிவம் என்பதை உணர்வார்கள், மேலும் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பார்கள் என்பதே இதன் முழுப் பொருளாகும்.

பாடல்: 23

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்

அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை

அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்

குருவை வழிபடிற் கூடலுமாமே.

விளக்கம்:

தம்பயன்கருதி ஓரொருகால் அளவில்லாத தேவர்கள் சிவனை வழிபட்டனர். அதனால் அவர்கட்குத் திருவடிப்பேறு எய்துதற்குரிய வாயில்கள் ஏதும் உண்டாகமாட்டா. சிவனைவழிபட்டுத் திருவடிப்பேறு எய்துதற்குரிய நன்னெறி நான்மையினைக் காட்டியருள்பவன் சிவகுரு. அக் குருவினை வழிபட்டால் திருவடிப்பேறு எய்துதல் கூடும். இத் திருமறையால் செந்நெறிச் செல்வர்களாகிய நாமும் நால்வர் திருமூலராகிய ஐம்பெருங் குரவர்கள் வழிநின்றாலன்றிச் செம்பொருட் சிவபெருமான் திருவடியிணையினை எய்துதல் கூடாது என்பது தேற்றமாம் என்க. வழிநிற்றல் - அவர்கள் தந்தருளிய திருமுறைகளை ஓதி வழிபட்டு ஒழுகுதல்.

பாடல்: 24

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி யில்லைநும் சித்தத்து

நின்றே நிலைبெற நீர்நினைந்துய்மினே.

விளக்கம்:

பண்டு தென்னாட்டில் வழிபடும் முழுமுதற் கடவுள் வழிக்குலம் ஏற்பட்டது. முன்னாளில் எல்லாரும் செந்தமிழ்நாட்டில் சிவனை வழிபட்டனர் - தொழுதனர். அதனால் 'சைவர்' என்னும் ஒரு குலமே திகழ்ந்திருந்து. தொழில்பற்றிய குலம் பலவிருந்தாலும்வழிபாட்டுக் குலம் ஒன்றாக இருந்தமையால் பிணக்கின்றி அனைவரும் இணக்கமாக வாழ்ந்தனர். அதனால் 'ஒன்றே குலமும்' என்னும் இம் மறைமொழி எழுவதாயிற்று. அதுபோல் சிவபெருமானையே செந்தமிழர் முழுமுதற்றெய்வமாகக் கொண்டு வணங்கினர். அதனால் 'ஒருவனே தேவனும்' என்னும் இம் மறைமொழியும் எழுவதாயிற்று. நன்றாக நினைந்து தொழுங்கள். நமன் துன்பம் என்று சொல்லப்படும் இறப்பும் பிறப்பும் நமக்கு என்றும் இன்று. மீளா ஆளாய்ச் சிவனடிக்கீழ் நாமிருப்பதால் நாளும் அழிந்தொழியும் நிலைகட்குச் சென்று மீளும் பிறர்போல் சென்று மீளும் நிலை நமக்கில்லை. அதனால் நன்னெறி நல்லாராகிய நீவீர் நும் நல்லுள்ளத்துச் சிவபெருமான் திருவடி நின்று நிலைபெறவே நீர் நினைந்து உய்ம்மின். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று இடையறாது ஓதப்படுவது சிறந்ததொரு நன்மையாகும். அந் நன்றே நினைமின் என்பதும் ஒன்று.

பாடல்: 25

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

விளக்கம்:

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

ஊ. பஞ்சபுராணம்

பாடல்: 26 1. தேவாரம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

- திருஞானசம்பந்தர்

விளக்கம்:

மண்ணில் நல்ல படி வாழலாம், எப்போதும் யோசித்துப் பார்த்தால் நல்ல கதிக்கு அடைய யாதுமோர் குறைவிலை, எந்த குறையும் இல்லை. கண்ணுக்கினிய சிறந்த வளங்களைக் கொண்ட கழு மலம் என்ற ஊரில் நல்ல பெண்ணான (பார்வதியோடு) பெருந்தகை இருப்பதால். தகை என்றால் அன்பு, அருள் , பெருமை என்று பொருள் இறைவன் இருக்கிறான் என்று நம்பிக்கையை விதைக்கிறது

பாடல்: 27 2. திருவாசகம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

- மாணிக்கவாசகர்

விளக்கம்:

வீடுபேறு அடையும் வழியைத் தெரியாத, முரட்டுத்தனமான, தீய மனிதர்களுடன் சேர்ந்து தவறு செய்து வாழ்ந்த என்னை. அன்பின் வழியாக இறைவனை அடைய வழிகாட்டி. பழைய கர்ம வினைகள் அனைத்தும் அழிந்து போகும்படி மனம் மற்றும் சித்தம் சார்ந்த மலக் குற்றங்களை நீக்கி, என்னை எல்லாம் சிவமாக மாற்றிய. எனக்கு அருள்புரிந்த இறைவனின் கருணையை எண்ணி வியந்து, இந்த அருள் வேறு யாரேனும் பெறுவார்களா என்று இரங்கிப் பாடும் வியப்புச் சொல் 'அச்சோ'.

பாடல்: 28 3. திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!

சித்தத்துள் தித்திக்குந் தேனே!

அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!

அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே.

- திருமாளிகைத்தேவர்

பாடல்: 29 4. திருப்பல்லாண்டு

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்

பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

மன்னிய தில்லைதன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்

பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே

பல்லாண்டு கூறுதுமே.

- சேந்தனார்

பாடல்: 30 5. பெரியபுராணம்

ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவும் ஆகிச்

சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்

பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்

போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

- சேக்கிழார்

எ. மூதுரை

பாடல்: 31

வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

விளக்கம்:

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

பாடல்: 32

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

விளக்கம்:

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

பாடல்: 33

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே -- அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர்.

விளக்கம்:

நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.

பாடல்: 34

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும்-இன்னாத

நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.

விளக்கம்:

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

பாடல்: 35

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

விளக்கம்:

நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு.

பாடல்: 36

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா -- தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா.

விளக்கம்:

கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.

பாடல்: 37

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.

விளக்கம்:

தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.

பாடல்: 38

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம்.

விளக்கம்:

அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே.

பாடல்: 39

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே

அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.

விளக்கம்:

நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும் அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நல்லது.

பாடல்: 40

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே;

அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது

விளக்கம்:

தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.

பாடல்: 41

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒரவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

விளக்கம்:

உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்.

பாடல்: 42

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி

ஏற்றம் கருமம் செயல்.

விளக்கம்:

நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை.

பாடல்: 43

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண்ணீரும் ஆகாது;

அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்.

விளக்கம்:

தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது. பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது. எனவே உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது.

பாடல்: 44

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம்

விளக்கம்:

கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்

பாடல்: 45

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி

தானும் அதுவாக பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்

கல்லாதான் கற்ற கவி.

விளக்கம்:

காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை. விஷயமும் இல்லை.

பாடல்: 46

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா

புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம்.

விளக்கம்:

புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்

பாடல்: 47

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா -- மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

விளக்கம்:

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது

பாடல்: 48

அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

விளக்கம்:

குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.

பாடல்: 49

சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர் மற்(று)

அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? -- சீரிய

பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்.

விளக்கம்:

தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன் சிதறலும் தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும்.

பாடல்: 50

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நானாழி - தோழி

நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்

விதியின் பயனே பயன்.

விளக்கம்:

தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன் ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.

பாடல்: 51

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி -- உடன் பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு.

விளக்கம்:

வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

பாடல்: 52

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்

புலி கிடந்த தூறாய் விடும்.

விளக்கம்:

நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

பாடல்: 53

எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே

கருதியவா றாமோ கருமம் -- கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்தில் செய்த வினை.

விளக்கம்:

மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?

பாடல்: 54

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்

பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து

நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம்.

விளக்கம்:

சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் சினத்தால் பிரிந்தாலும் பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே

பாடல்: 55

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்

கற்றாரைக் கற்றாறே காமுறுவர் -- கற்பிலا

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

விளக்கம்:

குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்

பாடல்: 56

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்.

விளக்கம்:

தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர்

பாடல்: 57

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் -- மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

விளக்கம்:

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

பாடல்: 58

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்

அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்

விளக்கம்:

கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

பாடல்: 59

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடா தாதலால் -- தம்தம்

தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்

மனம்சிறியர் ஆவரோ மற்று.

விளக்கம்:

தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம் குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம் மாறுவதில்லை

பாடல்: 60

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை

ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து

போம் போது அவளோடும் போம்

விளக்கம்:

ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான். அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்

பாடல்: 61

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

आந்தனையும் காப்பர் அறிவுடையோர் -- மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.

விளக்கம்:

தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

சான்றிதழ் பெற - வாய்மொழித்தேர்வு முறை

  1. தேர்வுக்கு கட்டணம் ஏதும் இல்லை. சான்றிதழ் பெறவும் கட்டணம் இல்லை.
  2. மாணவர்கள் முதல் (1 to 30 ) முப்பது பாடல்கள் கட்டாயம் படிக்கவேண்டும். இதில் ஏதேனும் பத்து பாடல்கள் கேகப்படும். எந்த பாடல் கேட்டாலும் பார்க்காமல் பாடிக்காட்ட அல்லது ஒப்புவிக்க வேண்டும். குறைந்தது பத்து பாடல்கள் ஒருவருக்கு கேக்கப்படும். ஆசிரியர் கேட்ட பாட்டினைத்தான் ஒப்புவிக்க வேண்டும்.
  3. மூதுரையில் (31to 61) ஏதேனும் ஆறு பாடல்கள் மாணவர் விருப்பப்படி பார்க்காமல் பாடி அல்லது ஒப்புவிக்க வேண்டும்.
  4. படலுக்கான விளக்கம் சொல்ல வேண்டியது இல்லை.
  5. மாணவர் பாடிய அல்லது ஒப்புவித்ததில் ஆசிரியருக்கு திருப்தி இல்லையெனில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டது. அவர்கள் மீண்டும் அடுத்த முறை நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
  6. மாணவர் தேர்ச்சி செய்வது - தேர்வுநடத்தும் ஆசிரியர் பொறுப்பு. அவரின் முடிவே இறுதியானது.
  7. வெளிநாடு, அல்லது வேறுமாநில மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடல்கள் பாடிகாட்டி சான்றிதழ் பெறலாம். ஆன்லைன் தேர்வுக்கு 9751324644 என்ற எண்ணிற்கு அழைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Foundation Logo

Dedicated to preserving Hindu heritage through education, spiritual guidance, and community service.

Contact Us

  • location_on 1172 Kainankarai, Mathur Industrial Estate Post, Pudukkottai District, Trichy- Pudukkottai Road, Near to Mathur Police Station, TRICHY 622 515. Tamil Nadu State. INDIA.
  • email hinduerfoundation@gmail.com
  • phone +91 04339 299739 / +91 70941 24644 / +91 96599 65205

Follow Us

© 2024 Hindu Educational and Religious Foundation. All Rights Reserved.

Designed by AhopeZ Innovations.